கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் டன் ஸ்டீல் (எஃகு) பல்வேறு விற்பனை நிறுவனங்களிடம் இருந்து நுகர்வு செய்யப்படும் நிலையில் பீளமேட்டில் செயல்பட்டுவந்த மத்திய அரசின் ஸ்டீல் விற்பனை நிறுவனம் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு மூலப்பொருட்களில் ‘ஸ்டீல்’ முக்கிய மூலப்பொருளாகும். பீளமேடு ரயில் நிலையம் அருகே மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ‘ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்’ (செயில்) நிறுவனத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சேமிப்பு கிடங்கு மற்றும் விற்பனை நடைபெற்று வந்தது.
பீளமேட்டில் ரயில்வே மேம்பால பணிகள் மேற்கொண்ட காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் மூடப்பட்டது. ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்து வாகன போக்குவரத்து தொடங்கிய நிலையிலும் மத்திய அரசின் ஸ்டீல் விற்பனை கிளை நிறுவனம் மட்டும் இன்று வரை மீண்டும் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) முன்னாள் தலைவர் ராமமூர்த்தி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியதாவது:
தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஸ்டீல் பல்வேறு வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் டன் ஸ்டீல், தொழில் நிறுவனங்களின் தேவைக்கு பல்வேறு விற்பனை நிறுவனங்களிடம் இருந்து நுகர்வு செய்யப்படுகிறது. மத்திய அரசின் ஸ்டீல் விற்பனை நிறுவனத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தங்களின் தேவைக்கு ஏற்ப 5 டன், 10 டன் என்பன உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வாங்கி பயன்பெற்று வந்தனர்.
மற்ற தனியார் விற்பனை நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை விட 5 முதல் 10 சதவீதம் விலை குறைவாக கிடைக்கும். ரயில்வே மேம்பால பணிக்காக மூடப்பட்ட மத்திய அரசின் ஸ்டீல் விற்பனை நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எம்எஸ்எம்இ தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு விரைவில் ஸ்டீல் விற்பனை நிறுவனத்தை திறக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தொழில்முனைவோரின் எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
‘ஏஐடியுசி’ தொழிற்சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேலு கூறும்போது,‘‘மத்திய அரசின் ஸ்டீல் விற்பனை நிறுவனம் திறக்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நிறுவனத்தை திறந்து விற்பனையை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.