சென்னை: முதலீட்டு மேலாண்மை துறையில் வெற்றிகரமாக செயல்படுவது தொடர்பாக சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட் மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை வெபினார் ஒன்றை ஒருங்கிணைத்தது.
இந்த வெபினாரில், சிஎஃப்ஏ (Chartered Financial Analyst) சான்றிதழ் பெற்ற முதலீட்டு மேலாண்மை துறை வல்லுநர்களான விஜயானந்த் வெங்கடராமன், சிவானந்த் ராமச்சந்திரன், மீரா சிவா, சீதாராமன் ஐயர் ஆகியோர் கலந்துகொண்டு இத்துறையின் போக்கு குறித்தும், இத்துறை சார்ந்த படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
வெல்த் யாந்ரா டெக்னாலஜிஸ் நிறுவனர் விஜயானந்த் வெங்கட்ராமன் முதலீட்டு மேலாண்மைத் துறையை அறிமுகப்படுத்திப் பேசுகையில் “பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் உட்பட பல்வேறு வகையான முதலீடுகளை நிர்வகிக்கும் துறையை முதலீட்டு மேலாண்மை என்கிறோம். தற்போதைய சூழலில் முதலீட்டு மேலாண்மைத் துறை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், இத்துறை சார்ந்தவர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட்டின் கேப்பிடல் மார்க்கெட் பாலிசி பிரிவின் இயக்குநரான சிவானந்த் ராமச்சந்திரன் முதலீட்டு மேலாண்மைத் துறையில் சிஎஃப்ஏ சான்றிதழின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். அவர் பேசுகையில், “இந்தத் துறையில் சிஎஃப்ஏ என்பது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும். முதலீடுகள் தொடர்பான அனைத்து பரிமாணங்களை அறிந்துகொள்ள சிஎஃப்ஏ படிப்பு உதவும். சிஎஃப்ஏ என்பது ஒரு சர்வதேச சான்றிதழ். அந்தச் சான்றிதழுக்கான தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. இச்சான்றிதழ் பெறுபவர்களுக்கு முதலீட்டு மேலாண்மை துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முதலீட்டு மேம்பாட்டுத் துறை ஆலோசகர் மீரா சிவா, “யார் வேண்டுமானாலும் சிஎஃப்ஏ தேர்வு எழுத முடியும். நீங்கள் வணிகம் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு முதலீட்டு மேலாண்மை துறை மீது ஆர்வம் இருந்தால் போதும். நானே அதற்கு ஒரு உதாரணம். நான் கணினி பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்று அத்துறை சார்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தேன். ஒரு கட்டத்தில் முதலீட்டு மேலாண்மை துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிஎஃப்ஏ தேர்வுக்கு முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றேன். சிஎஃப்ஏ பொறுத்தவரையில் அறவிழுமியங்கள் மிகவும் முக்கியம். முதலீடு களை நிர்வகிப்பது முக்கியத்துவமிக்க பணி மட்டுமல்ல, அது மிகவும் பொறுப்புமிக்க பணியும்கூட” என்று தெரிவித்தார்.
யூபி நிறுவனத்தின் வெளிநாட்டு வணிக பிரிவின் தலைவரான சீதாராமன் ஐயர் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையைத் தொடர்ந்து முதலீட்டு மேலாண்மை துறை புதிய பரிணாமம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. தரவுப் பகுப்பாய்வு உட்பட நவீன தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களுக்கான தேவை இத்துறையில் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே இத்துறையில் பணிபுரிந்து வருபவர் கள், தற்போதைய தொழில்நுட்ப போக்குக்கு ஏற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம்” என்றார்.