வணிகம்

உங்களுக்கு வங்கிக்கடன் மறுக்கப்படுகிறதா?- இதோ சில காரணங்கள்

சஞ்சய் விஜயகுமார்

சென்னையைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு அண்மையில் வங்கி கடன் தர மறுத்துள்ளது. இத்தனைக்கும் அவர் இதுவரை வாங்கிய கடனை எல்லாம் வெகு சரியான காலத்தில் திருப்பி செலுத்தியிருக்கிறார். அப்படியிருந்து அவருக்கு வங்கிக்கடன் மறுக்கப்பட்டது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

உங்களில் பலருக்கும் இதுபோன்று நேர்ந்திருக்கலாம். அதற்குக் காரணம் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் உள்ள குளறுபடியாக இருக்கலாம். அப்படியெனில் நீங்கள் கிரெடிட் ஸ்கோர் குறித்து நீங்கள் சில தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

கிரெடிட் ஸ்கோர் ஏன் முக்கியம்?

கிரெடிட் ஸ்கோர் என்பது நீங்கள் கடன் பெற எவ்வளவு நம்பிக்கைக்குரிய நபர் என்பதை வங்கிகளும், நிதிநிறுவனங்களும் தெரிந்துகொள்ள உதவுகிறது. அதிகமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் நபர் வங்கியின் சலுகைகளை எளிதில் பெற முடியும்.

யார் இந்த கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிப்பது?

இந்தியாவில், கிரெடிட் ஸ்கோரை சிபில் எனப்படும் கிரெடிட் தகவல் ஏஜென்சி, ஈக்விபேக்ஸ், எக்ஸ்பீரியன் போன்ற நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இந்த ஏஜென்சிகள் ரிசர்வ் வங்கியால் வழிநடத்தப்படுகின்றன. இவை வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் கடன் விவரங்களைப் பெற்று சில கணக்கீடுகள்  மூலமாக கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிக்கிறது. 300-ல் இருந்து 900 வரை இந்த அளவீடு உள்ளது.

கிரெடிட் ரிப்போர்ட்டுகளை இலவசமாகப் பெற முடியுமா?

கிரெடிட் ரிப்போர்ட்டுகளை ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிரெடிட் தகவல் ஏஜென்சியிடம் இருந்தும் பெற முடியும். ஆனால், இலவசமாக கிடைக்கும் ஸ்கோர் எல்லாம் விவாதத்துக்குரியது. எனவே, பணம் செலுத்தி பெறும் ரிப்போர்ட்டுகளின் நம்பகத்தன்மை அதிகம். ரூ.300 முதல் ரூ,400 வரை இதற்காக செலவழிக்க வேண்டியிருக்கும்.

கிரெடிட் ஸ்கோரில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?

இது குறித்து கிரெடிட் சுதார், என்ற கிரெடிட் ஆலோசனை மையத்தின் நிறுவனர் அருண் ராமமூர்த்தி கூறும்போது, "வங்கிகளில் கடன் கொடுக்கும் மற்றும் வட்டி நிர்ணய முடிவுகளைப் பொறுத்து கிரெடிட் ஸ்கோர் ஏஜென்சிகள் கணக்கிடுவதில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது.

ரிப்போர்ட்டிங் தவறு: அதாவது வங்கிகள் கிரெடிட் ஏஜென்சி தங்கள் வாடிக்கையாளரின் தகவலை தவறாகக் கொடுத்துவிட்டால் அது கிரெடிட் ரிப்போர்ட்டில் பிரதிபலிக்கும்.

அல்காரிதிமிக் தவறு: வங்கிகள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப சில் கணக்கீட்டு முறைகள் பின்பற்றப்படும் . சில பிரத்யேக அடையாளங்கள் இல்லாமல் போவதால் தரவுகளை பொருத்திப் பார்க்கும்போது சில தவறுகள் ஏற்படலாம்.

தகவல் திருட்டு: நல்ல கிரெடிட் ஸ்கோர் உடைய ஒருவரது தகவல்களை மற்றொருவர் திருடி அதன்மூலம் வங்கிக் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல்விட்டால் கிரெடிட் ஸ்கோரில் குளறுபடி ஏற்படும்

இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி?

இத்தகைய குளறுபடிகளில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம். தங்கள் அடையாளம் திருடப்படுவதைத் தவிர்க்க உரிய முன்னேற்பாடுகளை கணினியில் செய்வது அவசியம். ஏதாவது தவறு தென்பட்டால் உடனடியாக கிரெடிட் பியூரோவுக்கு தொடர்பு கொள்வது அவசியம்.

SCROLL FOR NEXT