மதுரை: பொதுமக்கள் தற்போது மொபைல் போன்கள், டிஜிட்டல் சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு பயனளிக்கும் வகையில், ‘யூடிஎஸ் மொபைல்’ அப்ளிகேஷன் இந்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ முன் முயற்சியின் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யூடிஎஸ் மொபைல் செயலியானது, முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள், பிளாட் பார்ம் டிக்கெட்டு வாங்கவும், சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கவும் நாடு முழுவதும் பயன்படுகிறது. இந்த செயலி பயன்படுத்து வதற்கு மிகவும் எளிமையானது. பயன்படுத்த தனி கட்டணம் எதுவுமில்லை.
இந்த மொபைல் செயலியை பிளே ஆப் ஸ்டோரிலிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலில் பயணி தனது மொபைல் எண், பெயர், பிறந்த தேதி, கடவுச் சொல், பாலினம் ஆகியவற்றை கொடுத்து யூடிஎஸ் செயலியில் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன், பயணிகளுக்கு பூஜ்ஜிய இருப்புடன் ரயில்வே வாலட் தானாகவே உருவாக்கப்படும்.
பயணம் தொடங்கும் ரயில் நிலையம், செல்ல வேண்டிய ரயில் நிலையம் போன்றவற்றை நாமே உள்ளீடு செய்து எளிதாக பயணச் சீட்டு பெறலாம். பயணிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர்-வாலட், நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம். இச்செயலி மூலம், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இருப்புப் பாதையிலிருந்து 15 மீட்டருக்கு அப்பால் இருந்தும் பெற முடியும்.
ஆனால் ரயில் நிலைய எல்கைக்குள் வந்த பிறகும் யுடிஎஸ் மொபைல் செயலியை பயன்படுத்தி ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்ட க்யூ ஆர் குறியீடு ஸ்கேன் செய்து, தேவையான தகவல்களை உள்ளீடு செய்து பயணசீட்டு பெறலாம். முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டு, பிளாட்பார்ம் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை 50 சதவீத பயணிகள், இச்செயலி மூலம் பெறுகிறார்கள் என கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.