சென்னை: தமிழகத்தில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வர வேண்டும் என தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பையில் சர்வதேச கடல்சார் உச்சி மாநாடு கடந்த 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உள்நாடு மட்டுமின்றி 100 வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டில் தமிழகத்துக்கான சிறப்பு அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தமிழக பொதுப்பணித் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசும்போது, “தமிழகத்தில் உள்ள அடிப்படை கட்டுமான வசதிகள் மற்றும் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வர வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால், தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள், திறன் வாய்ந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து எடுத்துரைத்தார்.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ் தனது உரையில், “சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, அண்மையில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பேசுகையில், “பசுமை எரிசக்தி உற்பத்தியில் முதலீட்டாளர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்” என்றார். இந்த மாநாட்டில் ஏராளமான வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.