வணிகம்

பண்டிகை காலம் நெருங்குவதால் வார்ப்பட நிறுவனங்களுக்கு சீரான பணி ஆணை: கோவை தொழில்துறையினர் தகவல்

இல.ராஜகோபால்

கோவை: நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கோவை வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் சீராக கிடைத்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

உற்பத்தி பிரிவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் வார்ப்படம் முக்கிய மூலப்பொருளாகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா வார்ப்பட உற்பத்தி தொழிலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் 600 வார்ப்பட தொழிற்சாலைகள் உள்ளன. இத்துறையில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

பண்டிகை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு ஆட்டோமொபைல் துறையில் தேவை அதிகரித்துள்ளதாகவும் இதனால் கோவையில் உள்ள வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் சீரான முறையில் கிடைத்து வருவதாகவும் தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.

தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரி மென் (ஐஐஎப்) தேசிய கவுர செயலாளர் முத்துகுமார், கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது: மூலப் பொருட்கள் விலை சீராக உள்ளது. பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதால் எந்த பிரச்சினையும் இல்லை. தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதில்லை.

டிராக்டர் விற்பனை மட்டும் கடந்த மாதம் சற்று மந்தமாக காணப்பட்டது. எதிர்வரும் மாதங்களில் சீராகும் என நம்பப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் ஆட்டோமொபைல் சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய கார்களுக்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழாவின் போதே இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. எதிர்வரும் மாங்களிலும் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் கோவை வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் தொடர்ந்து கிடைக்கின்றன. எனவே தொழில் நிறுவனங்களில் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT