கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடியேற்றப்பட உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற கோரி, கோவை தொழில் துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை சென்று அமைச்சர்களை சந்தித்த நிலையிலும் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து, கருப்பு கொடியேற்றும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல், ஜெயபால் ஆகியோர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடியேற்றப்பட உள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற உள்ளது.
நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 12 கிலோவாட்டுக்குகீழ் உள்ளவர்களுக்கு 3 பி-யிலிருந்து 3 ஏ1 பிரிவின்கீழ் மாற்றுதல், இரண்டு ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வை கை விடுதல் என்பன உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதில் 12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3 பி- பிரிவிலிருந்து 3 ஏ1 பிரிவின்கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது. சென்னையில் அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடியேற்றப்பட்டு, கருப்பு சட்டை அணிந்து தொழில்முனைவோர் அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்தகட்டமாக சென்னையில் அக்டோபர் 16-ம் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.