வணிகம்

ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடரும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. ரெப்போ விகிதத்தை முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடர இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து நான்காவது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் முந்தைய அளவிலேயே தொடரச் செய்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். நேற்று நடைபெற்றக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “தற்சமயம் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்திலேயே தொடர முடிவு செய்துள்ளோம். பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளோம். உள்நாட்டு தொழில் செயல்பாடுகள் நல்ல நிலையில் உள்ளன. உலக வளர்ச்சியில் இன்ஜினாக இந்தியா உருவெடுக்க உள்ளது” என்று தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி 6.5 சதவீதமாகவும் பணவீக்கம் 5.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதேபோல், நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பணவீக்கம் 6.4 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் 5.6 சதவீதமாகவும் நான்காம் காலாண்டில் 5.2 சதவீதமாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT