வணிகம்

பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்தம் - எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் @ நெல்லை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பயன்படுத் தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்தம் செய்த சேவை குறை பாட்டுக்காக பாளையங்கோட்டை எஸ்பிஐ வங்கி கிளைக்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

திருநெல்வேலி அருகே உள்ள தருவை கலைஞர் காலனியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அரி முத்துக்குமார் என்பவரின் மாத ஊதிய கணக்கானது, பாளையங்கோட்டையிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வங்கி நிர்வாகம் அவரை நிர்பந்தம் செய்து கிரெடிட் கா ர்டு வழங்கி உள்ளது. ஆனால் அந்த கார்டை அவர் பயன்படுத்தவில்லை. அதேநேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து கடந்த 2019- ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை ரூ17,742 -ஐ எவ்வித ஒப்புதலும் பெறாமல் வங்கி பிடித்தம் செய்துள்ளது.

கிரெடிட் கார்டு பயன்படுத்தாத நிலையில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வங்கி நிர்வாகத்துக்கு இமெயில் மூலமாகவும், நேரிலும் சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால், வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து வங்கி கணக்கில் இருந்து பணத்தை பிடித்தம் செய்து வந்துள்ளது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அரி முத்துகுமார், வழக்கறிஞர் பிரம்மா வாயிலாக திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த ஆணையத் தலைவர் கிளாஸ்டோன் பிளசிங் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் வங்கி நிர்வாகம் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும், வழக்கு செலவுக்கு ரூ.4 ஆயிரம், அரி முத்துக்குமாரிடம் இருந்து பிடித்தம் செய்த ரூ.17,742-ஐ திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT