குமுளி: தொடர் விடுமுறை முடிந்துள்ளதை அடுத்து, தேக்கடியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற் றுலா சார்ந்த வர்த்தகம் பாதிப் படைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில், தமிழக - கேரள எல்லையில் குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. வனப்பகுதியான இங்கு ஏரியில் படகுசவாரி, பசுமை நடை, மலையேற்றம், வியூ பாய்ன்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங் கள் உள்ளன. மேலும், கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத் தும் வகையில் களரி, கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப் படுகின்றன.
அருகிலேயே வாகமன், ராமக் கல்மெட்டு, செல்லாறுகோவில் மெட்டு போன்ற சுற்றுலா தலங் களும் உள்ளதால், பல பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளி நாட்டு பயணிகளும் அதிகளவில் தேக் கடிக்கு வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், மிலாது நபி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட அரசு விடுமுறைகளும் தொடர்ந்து வந்ததால், பலருக்கும் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தேக்கடி, வாகமன் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்திருந்தனர். தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து விட்டது.
இதனால் ஹோட்டல், விடுதி, ஜீப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வியாபார, வர்த்தகங்கள் களையிழந்துள்ளன. இது குறித்து ஜீப் ஓட்டுநர்கள் கூறுகையில், ‘தற்போது மழை காலம் என்றாலும், மழையின்றி இதமான பருவநிலையே உள்ளது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் சுற்றுலா சார்ந்த வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது’ என்றனர்.