சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 5) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதற்கிடையே, செப்.25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அக்.3-ம் தேதி ரூ.528 வரை குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,295-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,120-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை 0.40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.73,500 ஆக இருக்கிறது.
அமெரிக்காவில் தற்போது மிகப்பெரிய அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி சில நாட்களாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரம் டாலரில் இருந்து 1,815 டாலராகக் குறைந்தது. இதனால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்து வந்தது.
கடந்த 7 மாதத்துக்கு முன்பு பவுன் தங்கம் ரூ.42 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக தங்கத்தின் விலை அதிகரித்து ரூ.46 ஆயிரத்தை எட்டியது. தற்போது பழைய விலைக்கே தங்கம் இறங்கியது. புரட்டாசி மாதம் முடிந்த பிறகு விசேஷங்கள் அதிகரிக்கும். அப்போது தங்கத்தின் தேவையும் விலையும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 14 நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது.