கோவை: நீர் மூழ்கி டிரோன், ராணுவ தேவைக்கான ரோபோ உள்ளிட்ட அதி நவீன கண்டுபிடிப்புகள் உருவாக காரணமாக விளங்கும் கொடிசியா டிஃபன்ஸ் இன்னோவேஷன், அடல் இன்குபேஷன் மையத்தின் செயல்பாடுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.
கோவையில் நேற்று நடந்த மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடிசியா டிஃபன்ஸ் இன்னோவேஷன், அடல் இன்குபேஷன் மையத்தை பார்வையிட்டார். நீர் மூழ்கி டிரோன், வெடிகுண்டு, தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதை கண்டறிய ராணுவத்துக்கு உதவும் ரோபோக்கள் உள்ளிட்ட அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து, இன்னோவேஷன் மையத்தின் இயக்குநர்கள் சுந்தரம், ராம மூர்த்தி ஆகியோர் கூறும்போது, ‘‘புதுமையான மற்றும் அதி நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு சமுதாய மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு தேவைப்படும் உபகரணங்களை தயாரிப்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இம்மையம் தொடங்கப்பட்டது.
திட்டத்தின் மதிப்பு ரூ.20 கோடி. தற்போது 18 உபகரணங்கள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 12 உபகரணங்கள் அமைச்சரின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்பு, பயன் உள்ளிட்டவற்றை கேட்டறிந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்’’ என்றனர். கொடிசியா தொழில் அமைப்பின் தலைவர் திருஞானம் உடனிருந்தார்.