சத்துணவு முட்டைக்கு உரிய விலை வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்கள். 
வணிகம்

சத்துணவு முட்டை ஒப்பந்தத்தால் ரூ.1,200 கோடி இழப்பு: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்கள் தகவல்

செய்திப்பிரிவு

நாமக்கல்: கடந்த ஆண்டு சத்துணவு முட்டைக்கு ஒப்பந்தம் செய்ததில் ரூ.1,200 கோடிக்கு மேல் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, என நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையார்கள் தெரிவித்தனர்.

சத்துணவு முட்டைக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் முதன்மையாக உள்ளது. முட்டை உற்பத்தி தொழிலில் 10 லட்சம் பேர் நேரடி மற்றும் மறைமுகமாக வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். முட்டை உற்பத்தி செலவை விட குறைந்த விலையே கடந்த காலங்களில் கிடைத்ததால் இத்தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது.

இதற்கு சத்துணவு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் விலையும் முக்கிய காரணமாகும். சத்துணவு முட்டைக்கு உற்பத்தி செலவை விட குறைந்த விலையை குறிப்பிடும் நிறுவனங்கள், மிக மிகக் குறைந்த விலையில் முட்டையை கொள்முதல் செய்கின்றன. ஒப்பந்த நிறுவனங்கள் கேட்கும் விலைக்கு முட்டையை தர இயலாதபோது அந்நிறுவனத்தினர் வேறு மாநிலத்தில் முட்டையை கொள்முதல் செய்து சத்துணவுக்கு முட்டையை அனுப்புகின்றனர்.

இதனால் நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகின்றனர். முட்டை உற்பத்தியின் குறைந்த பட்ச அடக்க விலை 5 ரூபாயாகும். சத்துணவுத் திட்ட விநியோகத்துக்கு போக்குவரத்து மற்றும் இதர செலவினங்கள் 80 காசுகள் ஆகிறது. எனவே சத்துணவு திட்டத்திற்கான குறைந்த பட்ச ஏல புள்ளி ரூ.5.80-க்கு மேல் இருக்க வேண்டும்.

இவ்வாறு இருந்தால் மட்டுமே பண்ணையாளர்களை மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும். கடந்த ஆண்டு சத்துணவுத் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 70 லட்ச முட்டைகள் வீதம் விநியோகம் செய்யப்பட்டது. அந்த வகையில், முட்டை வழங்க ஒப்பந்தம் செய்ததில் ரூ.1,200 கோடிக்கு மேல் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்தாண்டும் குறைவான ஒப்பந்தபுள்ளிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால் எங்களது தொழிலும், வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கிவிடும், என்றனர்.

கடந்த ஆண்டு சத்துணவுத் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 70 லட்ச முட்டைகள் வீதம் விநியோகம் செய்யப்பட்டது. அந்த வகையில், கோழிப் பண்ணையாளர்களுக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT