கும்பகோணம்: கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்பில் நவீன வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக, 30 ஆண்டுகளுக்கு முன்பு சர்ச் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டது.
அதன்பின், பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாகமும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் இயங்கி வந்தன. நாளடைவில் அந்தக் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்ததால், அங்கு இயங்கி வந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அசூருக்கு மாற்றப்பட்டதுடன், அங்கிருந்த வணிக வளாகக் கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தின் மூலம் தொகுதிகளை மேம்படுத்துவதற்கான 10 முக்கிய பணிகளை தேர்வு செய்து, அதை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, இந்த பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 பணிகளை மேற்கொள்வது தொடர்பான மனுவை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.25 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியது: கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் அடித்தளம் மற்றும் தரைத்தளம் தலா 1,771 சதுர மீட்டரிலும், முதல் மற்றும் 2-வது தளம் தலா 1,720 சதுர மீட்டரிலும் கட்டப்படவுள்ளன.
இதில், கடைகள், பொழுதுபோக்கு அரங்கம் மற்றும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. மேலும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு கருவிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.