வணிகம்

செபிக்கு எதிரான ரிலையன்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது தீர்ப்பாயம்

செய்திப்பிரிவு

உள்பேர வர்த்தகத்தில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு செபி அபராதம் விதித்தது. செபிக்கு எதிராக தீர்ப்பாயத்துக்கு சென்றது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த வழக்கில் செபிக்கு ஆதரவாக, ரிலையன்ஸின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

வழக்கு விவரம்

2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்புக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் 4.1 சதவீத பங்குகள் விற்கப்பட்டன. முதலில் ஃபியூச்சர்ஸ் சந்தையில் விற்கப்பட்டு அதன் பிறகு ஸ்பாட் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியது.

இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 4,023 கோடி ரூபாய் வருமானமும் 513 கோடி ரூபாய் லாபமும் கிடைத்தது. இந்த உள்பேர வர்த்தகத்தை ரிலையன்ஸ் பெட்ரோ இன்வெஸ்ட் மெண்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நடத்தியது.

2008-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்த செபி, ரிலையன்ஸ் பெட்ரோஇன்வெஸ்ட்மென்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 11 கோடி அபராதம் விதித்தது. இதற்கிடையே குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் அபராதம் கட்ட ரிலையன்ஸ் நிறுவனம் தயாராக இருந்தது. ஆனால் செபி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கடந்த ஆண்டு(2013) ஜனவரியில் தீர்ப்பாயத்தை அணுகியது ரிலையன்ஸ்.

அந்த வழக்கு மீது திங்கள் கிழமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இதில் ரிலையன்ஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பாயத்தின் தலைவர் ஜே.பி.தேவ்தார் தீர்ப்பு வழங்கினார். இருப்பினும் ரிலையன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT