விருத்தாசலம்: தமிழகத்திலேயே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் 34 ஆயிரம் பயனாளிகளை வாடிக்கையாளர்களாகக் கொண்டு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதலிடத்தில் உள்ளது. கடலூர் புதுப்பாளையத்தை தலைமையி டமாகக் கொண்டு கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்த வங்கிக்கு மாவட்டம் முழுவதும் 32 கிளைகள் உள்ளன.
இந்த வங்கிகளில் பல்வேறு தரப்பினர் வாடிக்கையாளராக இணைந்திருந்தாலும், குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாயிகள் இந்த வங்கிகளில் பெரும்பான் மையான வாடிக்கையாளர்களாக உள்ளது இதன் சிறப்பு. இதற்கான காரணம் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் இந்த வங்கியில் வாடிக்கையாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு கடனுதவிகளும், நகைக் கடனும் எளிதில் கிடைக்கும் வகையில் நடை முறைப்படுத்தி இருப்பதுதான்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த வகையில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து மட்டும் ரூ.3.4 கோடி ரூபாய் 34 ஆயிரம் பெண் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வங்கியில் பூஜ்ய சேமிப்பு வங்கிக் கணக்கு நிலை உள்ளதால், இந்த வங்கிகளில் யாருக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பிடித்தம் என்ற நிலை இல்லை.
இதுதவிர தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளைக் காட்டிலும், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்தான் அதிக எண்ணிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் வாடிக்கை யாளர்களாக உள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் திலீப்குமார் கூறுகையில், "சிறந்த வங்கிச் சேவைகளை எங்களது அலுவலர்கள் மேற்கொண்டு, வாடிக்கையாளர்களை சிறந்த நண்பர்களாக கொண்டுள்ளதால் இந்த நிலையை எட்டியுள்ளோம். மேலும் அண்மையில் வடலூரில் நடைபெற்ற தூரிகை நிகழ்ச்சி வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.இதில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுத்துள்ளோம்" என்றார்.