மும்பை: பங்குச் சந்தையில் நேற்று கடும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 796 புள்ளிகள் குறைந்து 66,800 ஆக ஆனது. அதேபோல் நிஃப்டி 232 புள்ளிகள் சரிந்து 19,901 ஆக ஆனது. மொத்த அளவில் சென்செக்ஸ் 1.18 சதவீதம், நிப்டி 1.15 சதவீதம் சரிந்தன. சமீபத்தில் நிஃப்டி 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம் தொட்டிருந்த நிலையில், தற்போது சரிந்துள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஸ்டீல் நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி 4 சதவீதம் சரிந்தது. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 2.73 சதவீதம், ரிலையன்ஸ் 2.23 சதவீதம், பிபிசிஎல் 2.16 சதவீதம், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் 2.07 சதவீதம் என்ற அளவில் சரிவைக் கண்டன.
அமெரிக்காவில், நேற்று வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறினர். இதனால், பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியது. நேற்றைய தினம் இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம்கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பைபங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு ரூ.320 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.