வணிகம்

தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு செப்.25-ல் உற்பத்தி நிறுத்த போராட்டம்

செய்திப்பிரிவு

திருப்பூர்: தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில், திருப்பூரில் அனைத்து தொழில் அமைப்பு சங்கங்களும் ஒருங்கிணைந்து, திருப்பூர் சாய உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டன.

இதில் சைமா, நிட்மா, டாட், டீமா, டெக்பா, சிம்கா, நிட்டிங், டையிங், காம்பக்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி உட்பட திருப்பூரில் உள்ள அனைத்து சார்பு சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில், 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம், பரபரப்பு நேர ( பீக் ஹவர் ) கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். ‘3பி’யில் இருந்து ‘3ஏ1’ நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும்.

சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 25-ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான நிட்மா இணை செயலாளர் கோபி பழனியப்பன், டீமா தலைவர் எம்.பி.முத்து ரத்தினம், டெக்பா தலைவர் டி.ஆர்.ஸ்ரீகாந்த், பல்லடம் கோவிந்த ராஜூ ஆகியோர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இப்போராட்டத்துக்கு வணிகர்கள், உணவக உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT