இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 10.22 சதவீதம் அதிகரித்து 2,648 கோடி டாலரைத் தொட்டுள்ளது.இதேபோல இறக்குமதி 8.33 சதவீதம் உயர்ந்து 3,824 கோடி டாலராக உள்ளது. இதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறை 1,176 கோடி டாலராக உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட அட்டவணை தெரிவிக்கிறது.
தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றுமதி இரட்டை இலக்க விகிதத்தில் உயர்ந்துள்ளது. நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 12.4 சதவீதம் உயர்ந்து 2,799 கோடி டாலராக இருந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 8,011 கோடி டால ராகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 9.31 சதவீதம் கூடுதலாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி 7,328 கோடி டாலராக இருந்தது. மாதாந்திர வர்த்தக பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஜூன் மாதத்தில் 1,176 கோடி டாலராகவும், மே மாதத்தில் 1,123 கோடி டாலராகவும் இருந்தது. ஏப்ரலில் இது 1,008 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக பற்றாக்குறை பெருமளவு அதிகரித்ததற்கு தங்க இறக்குமதி அதிகரித்ததே முக்கியக் காரணமாகும். 2014 ஜூன் மாதத்தில் 312 கோடி டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் தங்க இறக்குமதி 188 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்காண்டு தங்க இறக்குமதி அளவு 65.13 சதவீத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் இறக்குமதி 11,319 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்த இறக்குமதி மதிப்பு 12,161 கோடி டாலராக இருந்தது. இப்போது 6.92 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 3,308 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் பற்றாக்குறை 4,832 கோடி டாலராக இருந்தது.