இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பொறுப்பேற்கவுள்ள விஷால் சிகாவின் ஆண்டு சம்பளம் சுமார் ரூ. 30 கோடியாக (ரூ. 50 லட்சம் டாலர்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 லட்சம் டாலர் மதிப்புக்கு நிறுவன பங்குகள் அவருக்கு ஒதுக்கப்படும்.
47 வயதாகும் சிகா ஆகஸ்ட் 1-ம் தேதி புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். இப்போது தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள எஸ்.டி. சிபுலாலின் பதவிக் காலம் இம்மாதத்துடன் முடிகிறது. சிகாவுக்கு வழங்க உள்ள சம்பளம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழு கூட்டம் (இஜிஎம்) இம்மாதம் 30-ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அதில் சிகாவின் சம்பளத்துக்கு ஒப்புதல் பெறப்படும்.
ஆண்டுச் சம்பளமாக 9 லட்சம் டாலரும், மாற்றத்தக்க ஊதியவிகிதமாக 41 லட்சம் டாலரும் அவருக்கு வழங்கப்படும். இத்துடன் ஆண்டுக்கு 20 லட்சம் டாலர் மதிப்புக்கு பங்குகளை இவர் வாங்கலாம். இவரின் மொத்த ஊதிய விகிதம் 70 லட்சம் டாலராகும்.
மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியின் ஆண்டு சம்பளம் 1.80 கோடி டாலராகும். ஐபிஎம் சிஇஓ சம்பளம் 1.62 கோடி டாலராகும். சிட்டி வங்கி தலைமைச் செயல் அதிகாரியின் சம்பளம் 1.44 கோடி டாலராகும். இவர்களுடன் ஒப்பிடுகையில் சிகாவின் சம்பளம் சற்றுக் குறைவாகும்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பல முக்கியமான தலைவர்கள் வெளியேறிய நிலையில் விஷால் சிகா தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். இன்போசிஸ் நிறுவனர் அல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறையாகும்.
ஜெர்மனியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எஸ்ஏபி-யில் இயக்குநர் குழு உறுப்பினராக சிகா இருந்தார். பொறுப்பேற்க உள்ள சிகா, ஐந்தாண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார். அவரது பதவிக்காலம் ஜூன் 13, 2019-ல் முடிவடையும் என்று இன்ஃபோசிஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.