திருப்பூர்: பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பூரில் இருந்து தமிழக முதல்வருக்கு நேற்று விரைவு தபால் அனுப்பி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
மின் கட்டண உயர்வுகளால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 11-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், தமிழக முதல்வருக்கு ‘இ-மெயில்’ அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் நிட்மா சங்க அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் அருகே தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்ற தொழில் அமைப்பினர், கோரிக்கையை வலியுறுத்தி விரைவு தபால் அனுப்பினர்.
இது தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோபி பழனியப்பன், முத்து ரத்தினம், ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியதாவது: பீக் ஹவர் கட்டணம் ரத்து, நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் அலுவலகத்துக்கும், தொழில்துறைக்கும் இ-மெயில் அனுப்பி வருகிறோம்.
சங்கம் சார்பிலும், தனித்தனி உறுப்பினர்களும் அனுப்பி வருகின்றனர். அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை. மின் கட்டண உயர்வால் தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் மட்டுமே போராட்டம் நடத்துகிறோம். பல நிறுவனங்கள் தொழிலை நடத்த முடியாமல் மூடிவிட்டனர்.
திருப்பூர் தொழில்அமைப்புகள் கூட்டாக இணைந்துநடைபயணமாக சென்று முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பியுள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி திருப்பூர் மாவட்டம் வருகிறார். அப்போது, தொழில்துறையினரை சந்தித்து குறைகளைதீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
இல்லையெனில், 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.