போதிய விலை கிடைக்காததால், சூளகிரி பகுதியில் புதினா வயலில் மாடுகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். 
வணிகம்

மகசூல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: சூளகிரியில் கால்நடைகளுக்கு தீவனமாகும் புதினா

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: மகசூல் அதிகரிப்பால், புதினா விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், சூளகிரி பகுதியில் விவசாயிகள் புதினா வயல்களில் மாடு களை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

சூளகிரி, ஓட்டர்பாளையம், சிம்பலதிராட்டி, மாரண்டப்பள்ளி, அத்திமுகம், சீபம், கீரனப்பள்ளி, உத்தனப்பள்ளி, திம்மசந்திரம், குடிசாதனப்பள்ளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு அறுவடை செய்யப்படும் புதினா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆண்டு முழுவதும் சந்தையில் புதினாவுக்கு வரவேற்பு உள்ள நிலையில், சந்தைகளுக்குப் புதினாவின் வரத்தை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கட்டு புதினா ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனையானது. தற்போது, சூளகிரி பகுதியில் மகசூல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கட்டு வெளிச் சந்தையில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சூளகிரியைச் சேர்ந்த விவசாயி மஞ்சு மற்றும் சிலர் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூளகிரி சந்தையில் 100 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை புதினா ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது, பெய்த தொடர் மழையால், புதினா மகசூல் அதிகரித்து விலை சரிந்துள்ளது. 100 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை ரூ.150 முதல் ரூ.200-க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இதனால், விவசாயிகளுக்கு அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை என்பதால், பல விவசாயிகள் புதினா வயல்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். மருத்துவ குணம் நிறைந்த புதினா மூலம் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் அல்லது புதினா சார்ந்த சிறுதொழில்கள் தொடங்க அரசு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT