முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் அமெரிக்க டவர் கார்ப்பரேஷன் (ஏடிசி) உடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா வில் ஏடிசி-க்குச் சொந்தமான செல்போன் கோபுரங்களின் (டவர்) சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். ஏடிசி நிறுவனத்துக்கு இந்தியாவில் 11 ஆயிரம் டவர்கள் உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4-ஜி செல்போன் சேவையை அளிக்கத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இவ்விதம் டவர்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவையை ரிலையன்ஸ் ஜியோ அளிக்க வழி ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பார்தி ஏர்டெல் மற்றும் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வியோம் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி அந்நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளான செல்போன் டவர் களை ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்திக் கொள்ளும்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் 82 ஆயிரம் மொபைல் டவர்களை பயன்படுத்திக் கொள்ளும். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் 42 ஆயிரம் டவர்களை பயன்படுத்த முடியும். அத்துடன் வியோம் நிறுவனம் மூலம் 42 ஆயிரம் செல்போன் டவர்களை பயன்படுத்தவும் வழி ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை யான காலாண்டில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.