வணிகம்

ஹால்டிராம்ஸ் நிறுவனத்தை வாங்க டாடா கன்ஸ்யூமர் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த பிரபல சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம்ஸை வாங்குவதற்கு டாடா கன்ஸ்யூமர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதற்கு டாடா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹால்டிராம்ஸ் நிறுவனத்தை டாடா கன்ஸ்யூமர் வாங்கும்பட்சத்தில், அது பன்னாட்டு நிறுவனமான பெப்சி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த செய்தி நேற்று வெளியான நிலையில் மும்பை பங்குச்சந்தையில் டாடா கன்ஸ்யூமர் பங்குகளின் விலை 3 சதவீதத்துக்கு மேல் ஏற்றம் கண்டன.

150 வகை சிற்றுண்டிகள்: குடும்ப நிறுவனமான ஹால்டிராம்ஸ் 1937-ல் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் 6.2 பில்லியன் டாலர் (ரூ.51,460 கோடி) சிற்றுண்டி சந்தையில் ஹால்டிராம்ஸ் பங்களிப்பு மட்டும் சுமார் 13% அளவுக்கு உள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹால்டிராம்ஸின் 150 வகையான சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், டாடா கன்ஸ்யூமர் அந்த நிறுவனத்தை கையகப்படுத்துவது அதன் வர்த்தக வரம்பை கணிசமாக விரிவுபடுத்த பெரிதும் உதவும் என்பது சந்தை ஆய்வாளர்களின் கணிப்பு.

உப்பு முதல் மினரல் வாட்டர் வரை விற்பனை செய்யும் டாடா கன்ஸ்யூமரின் வருவாய் கடந்த நிதியாண்டில் 1.7 பில்லியன் டாலராக (ரூ.14,110 கோடி) இருந்தது. டாடா குழும வருவாயுடன் ஒப்பிடும்போது இது சிறிய தொகையாகும். ஆட்டோ, விமானப் போக்குவரத்து, ஹோட்டல் என கடந்த நிதியாண்டில் மட்டும் டாடா குழுமம் 144 பில்லியன் டாலரை (ரூ.11.95 லட்சம் கோடி) வருவாயாக ஈட்டியுள்ளது.

SCROLL FOR NEXT