புதுடெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று டெல்லியில் கூறியதாவது:
வரும் 2030-ம் ஆண்டுக்குள் நமது எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது புதைபடிவமற்ற எரிசக்தி ஆதாரங்களில் இருந்து பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பை மேம்படுத்துவதற்காக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனியாரின் பேட்டரி எரிசக்தி சேமிப்பு திட்டங்களுக்கு ரூ.3,760 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும்.
வரும் 2030-31-ம் ஆண்டுக்குள் இத்தொகை 5 தவணைகளாக விடுவிக்கப்படும். இது 100 சதவீதம் மத்திய அரசின் மானியம் ஆகும். பேட்டரி எரிசக்தி சேமிப்பு திட்டங்களில் ரூ.9,500 கோடி முதலீட்டுக்கு இது வழி வகுக்கும். மேலும் 4 ஆயிரம் மெகா வாட் ஹவர்ஸ் சேமிப்பை ஏற்படுத்த உதவும்.
பருவநிலைக்கு ஏற்ப மின்சாரத்தின் தேவை மாறுபடுகிறது. மின்சார உற்பத்தி சாத்தியமில்லாத நேரங்களில் அல்லது இரவில் மின்சாரத்தின் தேவையை பூர்த்தி செய்ய எரிசக்தியை சேமித்து வைப்பது அவசியமாகிறது. பேட்டரி எரிசக்தி சேமிப்பு திட்டங்களை வணிக ரீதியாக சாத்தியமாக்குவதற்காக விஜிஎஃப் எனப்படும் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி மூலதன செலவில் அதிகபட்சம் 40 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.