தமிழகத்தில் ஆடிப்பட்டத்தில் பயிர் செய்யப்படும் எள்ளுக்கு என்ன விலை கிடைக்கும் என்பது குறித்து திருச்சியில் உள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் வணிக மேம்பாட்டு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி:
இந்தியாவில் எள் ஒரு முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இந்த பயிர்கள் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படுகிறது. மேலும், இதன் உற்பத்தி பருவநிலையைப் பொருத்ததாகும். உலக அளவில் 2011-12-ம் ஆண்டில் 78.97 லட்சம் ஹெக்டேரில் எள் பயிரிடப்பட்டது. இதன் உற்பத்தி 40.36 லட்சம் டன்களாகும்.
இந்தியாவில் 2012-13-ம் ஆண்டு கரீப் பருவத்தில் எள் உற்பத்தி 3.40 லட்சம் டன்களாகும். இது 2013-14ம் ஆண்டில் 3.50 லட்சம் டன்களாக உயர்ந்தது. தமிழகத்தில் 2011-12-ம் ஆண்டில் எள் 43,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 26,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஈரோடு, கரூர், சேலம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருப்பூர், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகியவை எள் பயிரிடப்படும் முக்கியமான மாவட்டங்களாகும்.
தமிழகத்தில் பொதுவாக எள் பயிர் இரண்டு பருவங்களில் பயிரிடப்படுகிறது. தைப்பட்டம் (ஜனவரி - பிப்ரவரி) மற்றும் ஆடிப்பட்டம் (ஜூலை- ஆகஸ்ட்) ஆகிய மாதங்களில் பயிரிடப்படுகிறது. பொதுவாக ஜூலை - ஆகஸ்டில் விதைக்கப்படும் எள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை சந்தைக்கு வருகிறது.
மேலும், தைப்பட்டத்தில் விதைக்கப்படும் எள் மார்ச் - ஏப்ரல் ஆகிய மாதங்களில் சந்தைக்கு வருகிறது. சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 14 ஆண்டுகள் நிலவிய சிவப்பு எள் விலைகளை ஆராயப்பட்டதில் எள் அறுவடை செய்யப்படும் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,500 முதல் ரூ.8,700 வரை விலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை முன்னறிவிப்பின் அடிப்படையில் விவசாயிகள் எள் சாகுபடி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என அந்த மையம் கூறியுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய 94435 93971 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது 0431 2422142 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.