ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் 'புல்லட் 350'  மாடலை அறிமுகம் செய்யும் நிறுவனத்தின் சிஇஓ பி.கோவிந்தராஜன்.  உடன், நிறுவனத்தின் தலைமை வர்த்தக அலுவலர் யத்விந்தர் சிங் குலேரியா. படம்: ஜார்ஜ் பிரவீன் 
வணிகம்

ராயல் என்பீல்ட் புதிய ‘புல்லட் 350' அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: ராயல் என்பீல்ட் நிறுவனம் அதன் புதிய ‘புல்லட் 350' மாடலை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான மாடலாக புல்லட் இருந்து வருகிறது. இந்நிலையில், நவீன இன்ஜினில், புதிய வடிவமைப்பில் ‘புல்லட் 350' மாடலை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு புல்லட் மாடலில் யுசி என்றழைக்கப்படும் யுனிட் கன்ஸ்ட்ரக்சன் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நவீன சூழலுக்கு ஏற்ப வாகனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், புதிய புல்லட் மாடலில் ‘ஜே சீரிஸ்' இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பி.கோவிந்தராஜன் கூறும்போது, ‘‘புல்லட் மாடல் முதன்முறையாக 1932-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 90 ஆண்டுகளாக புல்லட் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. மக்கள் மத்தியில் புல்லட் தனித்த அடையாளம் பெற்றுள்ளது. காலகட்டத்துக்கு ஏற்ப புல்லட்டில் மாற்றங்கள் செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுக்கு மேலாக புல்லட்டில் யுசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ‘ஜே சீரிஸ்' இன்ஜினை அறிமுகம் செய்துள்ளோம். இது அதிநவீனமானது. வாகனத்தின் செயல்திறனை பல மடங்கு மேம்படுத்தக்கூடியது. வாகனத்தின் தோற்றமும் புதுப்பொலிவு பெற்றுள்ளது’’ என்றார்.

350 சிசி இன்ஜினைக் கொண்டுள்ள இது, மிலிட்டரி, ஸ்டாண்டர்ட், பிளாக் கோல்ட் ஆகிய மூன்று வகைமையில் வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ.1.73 லட்சம் முதல் ஆரம்பமாகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT