கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகியவை சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும். வரும் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் விலை சீராக இருக்கும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, தமிழக சந்தைகளுக்கு கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து வரத்து உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் கொள்ளேகாலிலும், தமிழ்நாட்டின் உடுமலை மற்றும் தாராபுரத்திலிருந்தும் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், விலை முன்னறிவிப்பு பிரிவினர் திண்டுக்கல் சந்தைகளில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையை சந்தை ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில், வரும் அக்டோபர் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.45 முதல் ரூ.48 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவிலிருந்து வரத்து மற்றும் பருவ மழையை பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும்.
எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனை அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப் படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.