வணிகம்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1695-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.158 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 9.6 கோடிபயனாளிகள் உள்ளனர். மேலும், 75 லட்சம் பயனாளிகளைச் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ. 200 ரூபாய் குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது மேலும், ரூ. 200 குறையும். அந்த வகையில், பிரதமரின் உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ. 400 குறையும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.158 குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,522.50-க்கும், மும்பையில் ரூ.1482-க்கும், சென்னையில் ரூ.1695-க்கும் விற்கப்படுகிறது. புதிய விலை இன்றைக்கே அமலுக்கு வந்தது.

SCROLL FOR NEXT