ஓசூர்: மழையால் வடமாநிலங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், ஓசூர் குடைமிளகாய்க்குச் சந்தையில் வரவேற்பும், விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர், கெலமங்கலம், பைரமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பீன்ஸ், கேரட், முள்ளங்கி, குடை மிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதில் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் குடை மிளகாயை 1,000 ஏக்கருக்கு மேல் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
துரித உணவகங்களில் குடை மிளகாய் தேவை அதிகரித்துள்ளதால், உள்ளூர் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு ஓசூர் பகுதி குடை மிளகாய் விற்பனைக்குச் செல்கின்றன. கடந்தாண்டு மகசூல் அதிகரித்த நிலையில், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நடப்பாண்டில் குடைமிளகாய் மகசூல் அதிகரித்து, சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, வட மாநிலங்களில் அண்மையில் கனமழை பெய்ததால், அங்கு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓசூர் பகுதியிலிருந்து அதிக அளவில் குடைமிளகாய் விற்பனைக்குச் செல்கிறது.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஓசூர் பகுதியில் பசுமைக் குடில் மூலம் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய 3 நிறங்களில் குடை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதி குடை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனையானது. தற்போது, வடமாநிலங்களில் பெய்த மழையால் குடை மிளகாய் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஓசூர் பகுதியிலிருந்து வட மாநில சந்தைகளுக்கு அதிக அளவில் குடைமிளகாய் விற்பனைக்குச் செல்கிறது. அங்கு வரவேற்பும், நல்ல விலையும் கிடைக்கிறது. வெளி மாவட்டங்களில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையும், வெளி மாநிலங்களில் ரூ.120 முதல் ரூ.180 வரையும், வெளிநாடுகளில் ரூ.200 முதல் ரூ.300 வரை விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.