வணிகம்

2030-ல் இந்தியா 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியடையும்: முகேஷ் அம்பானி கணிப்பு

பியூஷ் பாண்டே

2030-ம் ஆண்டில் இந்தியா 10 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக வளர்ச்சியடைந்து உலக பொருளாதாரத் தலைமையாகத் திகழும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் தலைமைப்பண்பு கருத்தரங்கில் முகேஷ் அம்பானி கூறியதாவது:

இன்று இந்தியாவின் ஜிடிபி 2.5 டிரில்லியன் டாலர்களுடன் உலகில் 6-ம் இடத்தில் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நாம் இதனை மும்மடங்கு உயர்த்தி உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதாரமாக மாற்றுவோமா? ஆம், நம்மால் முடியும். 2030-ம் ஆண்டு வாக்கில் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றி, இந்தியா, சீனா, இந்தியா அமெரிக்கா இடையே உள்ள இடைவெளியை குறைக்க முடியுமா? ஆம். நம்மால் முடியும்.

இந்தியா உயர்வான வித்தியாசமான வளர்ச்சி மாதிரியை வழங்க முடியும். தொழில்நுட்பம், ஜனநாயகம், நல்லாட்சி, சமூகம் முழுதும் பரவும் சஹிருதய மனோபாவம் ஆகியவற்றின் மூலம் சமச்சீரான, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் ஒரு மாதிரியை இந்தியாவினால் வழங்க முடியும். சீனாவுக்கு எப்படி உற்பத்தியோ, இந்தியாவுக்கு அதி அறிவு.

4-வது தொழிற்புரட்சி காலக்கட்டத்தில் இருக்கிறோம். இந்த புரட்சி தகவல் தொழில்நுட்பம், செயற்கை அறிவு ஆகியவை மூலம் நிகழ்கிறது. 4வது தொழிற்புரட்சியில் இந்தியா வெறும் பங்கேற்பு நாடு மட்டுமல்ல, அதனை வழிநடத்தும் முன்னோடியாகவும் இருக்க முடியும்.

1.2 பில்லியன் உறுப்பினர்களுடன் ஆதார் எண் மிகவும் உயர்வான பயோமெட்ரிக் அடையாள ஒழுங்கமைப்பாகும். இந்தத் துறையில் இந்தியா தற்போது முன்னிலை வகிக்கிறது. மிகவும் முன்னேறிய பொருளாதாரங்களை விடவும் ஆதார் தற்போது பல ஆண்டுகள் முன்னோடியாகத் திகழ்கிறது.

‘மொபைல் பிராட் பேண்ட்: இந்தியா நம்பர் 1’

ஓராண்டுக்கு முன்பாக மொபைல் பிராட் பேண்டில் இந்தியா 150வது இடத்தில் இருந்தது. ஜியோ அறிமுகத்துக்குப் பிறகு முதலாம் இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியர்கள் தற்போது அதிகமான தரவுகளை நுகர்கின்றனர். தரவுதான் இன்றைய விதி என்றால் இந்தியா அதனுடன் மகிழ்ச்சியுடன் இணையத் தயாராக உள்ளது. வரும் காலங்களில் இத்தகைய வெற்றிக்கதைகளை இந்தியாவிலிருந்து நாம் உலகிற்கு கூறிக்கொண்டிருப்போம்.

5 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய தொழில்கள் பெரும்பாலும் அயல்நாட்டில் முதலீடு செய்த போது நாங்கள் 60 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய முடிவெடுத்தோம். இந்த முதலீட்டுச் சுழற்சி நிறைவடையும் தருணத்தில் இருக்கிறோம். இந்தியாதான் உலகிலேயே மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பு நாடு என்ற உறுதியுடன் இதனைச் செய்கிறோம். எனவே இந்த வளர்ச்சிப்பாதையில் அயல்நாட்டு முதலீட்டாளர்களும் இணைய அழைக்கிறோம்.

இவ்வாறு பேசினார் முகேஷ் அம்பானி.

SCROLL FOR NEXT