சென்னை: உத்தராகண்ட் அரசு நடப்பு ஆண்டில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ஐநடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதை நிறைவேற்றும் வகையில், நேற்று முன்தினம் (ஆக.21) புதுடெல்லியில் தொழில்துறையினருடன் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்துரையாடினார். நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் உத்தராகண்ட் மாநிலத்தை தொழில்முனைவோர் தங்கள் பணியிடமாக மாற்ற அழைப்பு விடுத்தார்.
அப்போது எளிதாகத் தொழில் செய்ய உத்தராகண்ட் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. கலந்துரையாடலின்போது பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகள் தங்கள் ஆலோசனைகளை அளித்து, மாநிலத்தில் முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டனர்.
பின்னர் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றார். உத்தராகண்ட் அரசு தொழில் முனைவோருக்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுக்கும் என்று முதல்வர் கூறினார்.