புதுடெல்லி: இந்தியாவின் யுபிஐ பணப் பரிவர்த்தனை முறைக்கு ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் வோல்கர் விஸ்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி மிக சுலபமாக பணத்தை செலுத்திய பிறகு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) வலைதள பதிவில் ‘‘இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உலகம் பாராட்டும் வகையில் உள்ளது. யுபிஐ பரிவர்த்தனையின் உதவியால் கோடிக்கணக்கான மக்கள் ஒரு சில நொடிகளில் தங்களது பரிவர்த்தனைகளை முடித்து விடுகின்றனர்.
24 மணி நேரமும் எந்தவித தடையுமின்றி எளிமையான பணம் செலுத்தும் இம்முறையை ஜெர்மனியின் டிஜிட்டல் துறை அமைச்சர் நேரடியாக அனுபவித்து அதன் பால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் ஜெர்மன் ஆர்வமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி அமைச்சர் வோல்கர் விஸ்சிங் இந்தியா வந்தபோது யுபிஐ முறையில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வீடியோவையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.
யுபிஐ முறையை பயன்படுத்துவதற்கு இதுவரை இலங்கை, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.