திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த வாடாமல்லி பூக்கள் 
வணிகம்

ஓணம் பண்டிகை: திண்டுக்கல்லில் இருந்து கேரளா சென்ற 10 டன் வாடாமல்லி

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: ஓணம் பண்டிகை கொண்டாட்டத் துக்கு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து 10 டன் வாடாமல்லி பூக்களை கேரள மாநில வியா பாரிகள் வாங்கிச் சென்றனர்.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் இவ்விழா நடைபெறுகிறது. இதையொட்டி கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பல வண்ணப் பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் இடுவர். இதற்காக தமிழகத்தில் இருந்து பல வண்ணப் பூக்களை கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

இதில் முக்கியமான பூ வாடாமல்லி. அதிக நாட்கள் இந்த பூ வாடாமல் இருப்பதால் கேரள வியாபாரிகள் இதை வாங்கி செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ வாடா மல்லி பூ ரூ.40 வரை விற்ற நிலையில் தற்போது வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்றது.

தேவை அதிகரித்தபோதும், வரத்து அதைவிட அதிகரித்ததால் ஓணம் பண்டிகை நாட்களில் அதிக விலைக்கு விற்கும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விலை குறைவு காரணமாக கேரள வியாபாரிகள் அதிகளவில் வாடாமல்லி பூக்களை கொள்முதல் செய்து கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கலில் இருந்து கேரளாவுக்கு லாரிகளில் மூட்டைகளில் அனுப்பப்படும் வாடாமல்லி பூக்கள்

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து மட்டும் நேற்று லாரிகளில் 10 டன் வாடாமல்லி பூக்கள் பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 10 நாட்கள் பண்டிகை என்பதால், கேரளாவில் இருந்து ஆர்டர் பெற்று தினமும் பூக்களை வாங்கி அனுப்புவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT