வணிகம்

பட்ஜெட்டும் பொருளாதார வளர்ச்சியும்

இராம.சீனுவாசன்

இந்தியாவின் பொருளாதார திட்டங்களின் முக்கியக் குறிக்கோள்களின் பிரதா னமானது ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி’. இது வரை நாம் சந்தித்த 12 ஐந்தாண்டு திட்டங்களின் முக்கியக் குறிக்கோள் இதுவாகவே இருந்து வருகிறது.

ஒவ்வொரு பட்ஜெட் சமர்ப்பிக்கும்போதும் நிதி அமைச்சர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் போக்கினை விளக்கி, அதன் அடிப் படையில் பொருளாதாரக் கொள்கையின் தாக்கங்களையும் மாற்றங்களையும் விவரிக்கிறார். இவ்வாறு பொருளாதார வளர்ச்சிக் குறியீடாகிய ‘வளர்ச்சி விகிதம்’, நம் பொருளாதார விவாதங்களின் நீங்க முடியாத அம்சமாகியுள்ளது.

வளர்ச்சி விகிதம், ஒவ்வொரு வருடமும் நாட்டின் மொத்த உற்பத்தியின் உண்மை உயர் வினைக் குறிப்பிடும் ஒரு புள்ளிவிவரமாகும்.

இன்றைய சூழலில் இதனை ஒட்டிய விவாதங்கள் அதிகமாகவே உள்ளன. கடந்த 1௦ ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் இருந்ததால், இந்த 1௦ ஆண்டுகளின் வளர்ச்சி விகிதம் அரசியல் ரீதியாக முக்கிய விவாதப் பொருளாக உள்ளது.

இந்த 1௦ ஆண்டுகளில் ஒட்டுமொத்த வளர்ச்சி 6.7% என்றும், அதில் குறிப்பாக 2005-06, 2006-07 ஆகிய ஆண்டுகளில் முறையே 9.5%, 9.6% என்று இந்தியா இதுவரை கண்டிராத வளர்ச்சி அடைந்தது எனவும், ஆக, நாட்டின் மொத்த வளர்ச்சி எங்கள் ஆட்சி காலத்தில்தான் மிக அதிகமாக இருந்தது என்று காங்கிரஸ் கூறுகிறது.

ஆனால், 2008-09 முதல் வளர்ச்சி குறைந்துள்ளது எனவும், குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில், 2011-12, 2012-13, 2013-14 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.7, 4.5, 4.7 என்று படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள் ளது, இது மக்களின் வாழ்வாதா ரத்தை குலைத்ததுடன், பணவீக்கத்திற்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பது பாஜக முதலான கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.

கடந்த 1௦ ஆண்டுகளின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, இதில் இரண்டு விதப்போக்குகள் தெரிகின்றன.

ஒன்று, 2003-04 தொடங்கி வேகமான வளர்ச்சியும், 2008-09ல் இருந்து வளர்ச்சி சரிந்ததையும் பார்க்கமுடிகிறது.

வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. 2008-09 இல் ஏற்பட்ட உலக நிதி சிக்கலும், அதனைத் தொடர்ந்த பொருளாதார மந்த நிலையும்தான் காரணம் என்று காங்கிரஸ் கூறுகிறது. 2008-09இலிருந்து அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி எடுத்த பொருளாதார ஊக்க நடவடிக்கைகளால் (வரி குறைப்பு, அதிக பொது செலவு) அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் உயர்ந்தது எனவும், அதன் பிறகு உலக மந்த நிலை, உலக நாடுகளின் பணக் கொள்கை என்ற பல காரணங்களால் வளர்ச்சி குறைந்தது என்றும் காங்கிரஸ் விளக்கம் அளிக்கலாம்.

ஆனால், நாட்டில் முதலீட்டை உயர்த்தாமல் இருந்தது, பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தாமல் இருந்தது, இவற்றால் உள்ளநாட்டு தேவை குறைந்து, பொருள் உற்பத்தியும் மந்த நிலையை அடைந்தது என்று தொழில் துறை அமைப்புகளும், பொருளியல் ஊடகங்களும், பொருளியல் அறிஞர்களும் கூற, இப்போது அனைவரின் கவனமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பட்ஜெட் 2014-15 என்ன செய்ய போகிறது என்பதுதான்.

வளர்ச்சி மட்டுமே நமது பொருளாதார பிரச்சினை இல்லை, பல சமயங்களில் அதுவே பிரச்சினையின் துவக்கம் எனவும், வலுவான விமர்சனங்கள் உண்டு. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விமர்சனங்களை பார்ப்போம்.

இராம.சீனுவாசன்- seenu242@gmail.com

SCROLL FOR NEXT