இன்சூரன்ஸ், பாதுகாப்பு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக் கான உச்சவரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “இன்சூரன்ஸ் துறையில் முதலீட்டுக்கு பற்றாக் குறை நிலவுகிறது.
மேலும் இத்துறையின் பல்வேறு பிரிவுகளை விரிவுபடுத்த வேண்டி உள்ளது. எனவே, இப்போது 26 சதவீதமாக உள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கான உச்சவரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்படும்” என்றார்.
இதன்மூலம் இந்திய இன் சூரன்ஸ் நிறுவனங்கள் வெளி நாடுகளில் உள்ளஇத்துறை சார்ந்த நிறுவனங்களிலிருந்து கூடுதல் நிதியை முதலீடாகப் பெற முடியும்.
இதுதொடர்பாக, கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதாவைக் கொண்டுவந்தது. ஆனால், பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறை
பாதுகாப்புத் துறைக்கு தேவை யான ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் இப்போது உள்ள 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு 49 சதவீதமாக அதி கரிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி கூறும்போது, “உலகிலேயே ராணுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இத்துறையின் உள்நாட்டு உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. ராணுவ தளவாடங்களுக்கு தேவையான உதிரி பாகங்களில் பெரும்பாலானவற்றை வெளிநாட்டு அரசு, தனியார் நிறுவனங்களிலிருந்து வாங்குகிறோம். அந்நியச் செலாவணி அதிகரிப்பில் இது கணிசமான பங்கு வகிக்கிறது. எனவே, அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்படுகிறது” என்றார்.