கோவை: நடப்பாண்டு சீசனில் தற்போது வரை 320 லட்சம் பேல்கள் பருத்தி சந்தைக்கு வந்துள்ளன. ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவ பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தியை முக்கிய மூலப்பொருளாக இயங்கும் இந்திய ஜவுளித்தொழில், விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக திகழ்கிறது. ஆண்டுதோறும் அக்டோபரில் தொடங்கி செப்டம்பர் வரை பருத்தி சீசனாகும். இவ்வாண்டு சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 320 லட்சம் பேல்கள் பருத்தி சந்தைக்கு வந்துள்ளதாகவும், இறக்குமதி வரி 11 சதவீதத்தை நீக்கினால் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் கூறியதாவது: இந்தாண்டு பருத்தி சீசனில் மொத்தம் 324 லட்சம் பேல்கள் பருத்தி சந்தைக்கு கொண்டு வரப்படும் என மத்திய பருத்தி அமைச்சகத்தால் கணிக்கப்பட்டது. தற்போது வரை 320 லட்சம் பேல்கள் பருத்தி சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று சர்வதேச பருத்தி ஒரு கேண்டி (356 கிலோ) ரூ.55,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் உள்நாட்டில் விளைவிக்கப்படும் பருத்தி ஒரு கேண்டி ரூ.60 ஆயிரம் ரூபாய். சர்வதேச பருத்தியின் விலையை விட இந்திய பருத்தியின் விலை 8 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் இவ்வாண்டு ஏப்ரல், மே, ஜூன் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் பருத்தி, நூல், துணி, மேட் அப்ஸ், கைத்தறி ஜவுளிப் பொருட்கள் 13 சதவீதமும், அதே போல் செயற்கை நூலிழை, நூல், துணி, மேட்அப்ஸ் உள்ளிட்ட பொருட்கள் 13 சதவீதமும், ஆயத்த ஆடைகள் 18 சதவீதமும் குறைந்துள்ளன.
மத்திய அரசு பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதனால் இந்திய மொத்த ஜவுளித் தொழில் சிறப்பான வளர்ச்சியை பெறும். மிக நீண்ட இழை பருத்தி 75 சதவீதம் அமெரிக்கா, எகிப்து, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இத்தகைய பருத்தி வகைகளுக்கு தனியாக எச்எஸ்என் கோடு இல்லாததால் இறக்குமதி வரி 11 சதவீதத்தை நீக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இவ்வகை பருத்திக்கு எச்எஸ்என் கோடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இறக்குமதி வரியை நீக்கினால் தொழில்துறையினருக்கு பெரிதும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.