வணிகம்

உடுமலையில் மாங்கூழ் தொழிற்சாலை அமையுமா? - மா விவசாயிகள் எதிர்பார்ப்பு

எம்.நாகராஜன்

உடுமலை: மா விளைச்சலுக்கு ஏற்ற தட்ப வெப்ப, நிலை இருப்பதால் உடுமலை பகுதியில் ஆண்டுக்கு இருமுறை மா விளைச்சல் கிடைத்து வருகிறது. இப்பகுதியை மையமாக கொண்டு ‘மாங்கூழ்’ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையை அடுத்துள்ள தளி, ஜல்லிபட்டி, மானுப்பட்டி, திருமூர்த்திமலை, பொன்னாலம்மன்சோலை, ருத்திராபாளையம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சாகுபடி நிலங்களால் ஆண்டு முழுவதும் மா சாகுபடிக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. இப்பகுதியில் ஆண்டுக்கு இருமுறை விளைச்சல் கிடைத்து வருகிறது.

இது குறித்து மா சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: மானாவாரி பயிரான மா விவசாயத்துக்கு குறைந்த அளவு நீரும், அதற்கேற்ற தட்ப, வெப்ப நிலையும் அவசியம். அந்த இரண்டும் உடுமலை விவசாயிகளுக்கு இயற்கை வழங்கியுள்ளது. அதனால் பல ஆண்டுகளாக இரு போக விளைச்சல் கிடைக்கிறது. நவீன வேளாண்மையின் வரவால் நூற்றுக்கும் மேற்பட்ட மா வகை நாற்றுகள் கிடைக்கின்றன. அதில் பாரம்பரிய ரகங்கள் இல்லை. பெரும்பாலானவை ஒட்டுரகம் தான்.

அதில் 40 முதல் 50 வகையான ரகங்களையே உடுமலை வட்டார விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால், எங்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை. காட்டுப் பன்றிகள், யானைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. மாவுப் பூச்சி தாக்குதல் அதிக அளவில் உள்ளது. கட்டுப்படியான விலை கிடைக்கும் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.

உடுமலை பகுதி விவசாயிகளின் நலனுக்காக மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும். தற்போது ஒரு சில தனியார் ஆலைகள் மாம்பழங்களை கொள்முதல் செய்து அவற்றில் இருந்து கூழ் எடுத்து அதை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். அவ்வாறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருளுக்கு விலையும் கூடுதலாக கிடைக்கிறது.

இதனால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. ஆழ்குழாய் அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலமே விவசாயம் நடைபெறுகிறது. எனவே சொட்டு நீர் பாசனத்துக்கு மானிய உதவி அளிக்க வேண்டும். எனவே, அரசே மாங்கூழ் தொழிற்சாலை அமைத்தால் மா விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும், என்றனர்.

இது குறித்து தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது: உடுமலை வட்டாரத்தில் காளப்பாடி, அல்போன்சா, பங்கனப் பள்ளி, நீலம், பெங்களூரா என பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஏக்கருக்கு 5 முதல் 6 டன் என்ற அளவில் ஆண்டுக்கு 7,500 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சாதகமான தட்ப, வெப்பம் நிலவுவதால், தமிழகத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்து ஆண்டுக்கு இருமுறை விளைச்சல் கிடைப்பதில் உடுமலை முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை மாம்பழ சீசன் இருக்கும். மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையும், குளிர்பதனக் கிடங்கும் அமைத்துத் தர வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம், என்றனர்.

SCROLL FOR NEXT