புதுடெல்லி: கடைசி நேர பரபரப்பை தவிர்க்க, நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் 1.36 கோடி பேர் ஐ.டி.ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 94% அதிகம்.
ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் வருமான வரிப் படிவம் (ஐ.டி.ரிட்டர்ன்) தாக்கல் செய்யலாம். இதற்கான கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி ஆகும். ஆனால், பெரும்பாலானவர்கள் ஜூலை மாதத்தில்தான் படிவத்தை தாக்கல் செய்கின்றனர். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஜூலை மாதத்தில் மட்டும் 5.41 கோடி பேர் வரிப்படிவம் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக ஜூலை 31 வரை 6.77 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில் 1.36 கோடி பேர் ஐ.டி.ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 70.34 லட்சமாக இருந்தது. அதாவது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முதல் 3 மாதத்தில் ஐ.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 93.76% அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி ஐ.டி.ரிட்டர்ன் தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதியே இந்த எண்ணிக்கை எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.