இந்தியன் வங்கி லாபம் ரூ.207 கோடி
இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 207.15 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 317.39 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானத்திலும் சிறிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.4,195 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது 4,144 கோடி ரூபாயாக இருக்கிறது. வர்த்தகத்தின் இடையே இந்தியன் வங்கி பங்குகள் 5 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. ஆனால் வர்த்தகம் முடியும்போது 1.84% சரிந்து 157.70 ரூபாயில் பங்கின் வர்த்தகம் முடிந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 10% உயர்வு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 10 சதவீதம் உயர்ந்து 1,405.12 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 1,275 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த வருடம் ரூ.11,746 கோடியாக இருந்த மொத்த வருமானம், இப்போது ரூ.12,825 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 5.48 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.02 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த விகிதம் கடந்த வருடம் இதே காலாண்டில் முறையே 5.25 மற்றும் 2.85 சதவீதமாக இருந்தது.
கோல்கேட் பாமோலிவ் லாபம் ரூ.134 கோடி
எப்.எம்.சி.ஜி. நிறுவனமான கோல்கேட் பாமோலிவ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் சரிந்து 134.91 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 185.22 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது.
நிகர விற்பனை 12.55 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.844.62 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.950.64 கோடியாக உயர்ந்திருக்கிறது. புதுமைகளை புகுத்தி, செலவுகளை குறைத்து, விலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக விற்பனை அதிகரித்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
பயோகான் லாபம் ரூ.103 கோடி
உயிரி தொழில்நுட்பத்துறை நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 9% உயர்ந்து 103 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.94 கோடியை மட்டுமே நிகர லாபமாக பயோகான் ஈட்டியது.
நிறுவனத்தின் வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.723 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.742 கோடியாக இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் சவால்கள் காரணமாக வருமானத்தில் பெரிய ஏற்றம் இல்லை என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய தலைமை நிதி அதிகாரியாக சித்தார்த் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.