வணிகம்

ஸ்விகி வழியில் சொமேட்டோ: உணவு ஆர்டருக்கு கட்டணம் வசூலிக்க திட்டம்

செய்திப்பிரிவு

குருகிராம்: ஸ்விகி வழியில் ஒவ்வொரு உணவு ஆர்டருக்கும் ரூ.2 வீதம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது சொமேட்டோ. இது தொடர்பாக சோதனை முறையிலான முயற்சியை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

இப்போதைக்கு இந்த கட்டண நடைமுறை குறிப்பிட்ட சில பயனர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “சொமேட்டோவை தொடர்ந்து இயக்க செய்ய இந்த சிறிய கட்டணம் உதவும்” என பாப்-அப் மெசேஜில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இப்போதைக்கு இது சோதனை முயற்சி தான் என்றும், இதை தொடர்வது அல்லது கைவிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் சொமேட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஸ்விகி நிறுவனம் ஒவ்வொரு உணவு ஆர்டருக்கும் ரூ.2 வீதம் கட்டணம் வசூலிக்க தொடங்கியது. அதே வழியில் தற்போது சொமேட்டோவும் இறங்கியுள்ளது. ப்ளாட்பார்ம் கட்டணம் என்ற பெயரில் இது வசூலிக்கப்பபடுகிறது. இந்த தொகை சொமேட்டோவின் சராசரி ஆர்டர் தொகையான ரூ.415-ல் வெறும் 0.5 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு பெரிய லாபம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் போனில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வரும் பயனர்களாக இருப்பார்கள். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும். இந்த நுகர்வு கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்துள்ள சூழலில் உணவு ஆர்டருக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சொமேட்டோ சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT