வணிகம்

காலாண்டு முடிவுகள்

செய்திப்பிரிவு

பேங்க் ஆப் பரோடா லாபம் 16% உயர்வு

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் நிகர லாபம் 16.6 சதவீதம் உயர்ந்து 1,361 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் 1,167 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை குறைவாக இருந்ததால் நிகரலாபம் அதிகரித்திருக்கிறது.

வங்கியின் மொத்த லாபம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.10,717 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.11,682 கோடியாக இருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை கடந்த வருடத்தின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது பாதியாக குறைந்திருக்கிறது. கடந்த வருடம் 1,017 கோடியாக இருந்த வாராக்கடன் இப்போது ரூ.526 கோடியாக இருக்கிறது. வாராக்கடன் 1.58 சதவீதமாக குறைந்திருக்கிறது.

ஹெவல்ஸ் லாபம் ரூ.107 கோடி

மின் சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் ஹெவல்ஸ் இந்தியாவின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 13.32 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 94 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 107 கோடி ரூபாயாக இருக்கிறது.

நிகர விற்பனையும் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,044 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.1,267 கோடியாக உயர்ந்திருக்கிறது. அனைத்து பிரிவு பொருட்களின் எண்ணிக்கையிலும் லாப வரம்பிலும் நல்ல வளர்ச்சியை பெற்றிருப்பதாக நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் அனில் ராஜ் குப்தா தெரிவித்தார். கட்டுமானத்துறை வளர்ச்சி அடைந்து வருவதால் வரும் காலாண்டுகளிலும் நல்ல வளர்ச்சி இருக்கும் என்றார்.

ஹெச்.யூ.எல். லாபம் 3.68% உயர்வு

எப்.எம்.சி.ஜி. துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலிவரின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 3.68 சதவீதம் உயர்ந்து 1,056 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 1,019 கோடி ரூபாயாக இருந்தது. சந்தை எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் நிகர விற்பனை 13.20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 6,687 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 7,570 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

செலவுகள் அதிகரித் திருப்பதால் லாபம் குறைந்தி ருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,789 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ.6,466 கோடியாக இருக்கிறது.

டாபர் நிகர லாபம் ரூ. 210 கோடி

டாபர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 13.3 சதவீதம் உயர்ந்து 210 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 186 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. நிறுவனத்தின் நிகர விற்பனையும் 13.16 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1,647 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 1,869 கோடி ரூபாயாக இருக்கிறது.

டாபர் அனைத்து பிரிவுகளிலும் சீரான வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று அதன் சிஇஓ சுனில் துக்கல் தெரிவித்தார். கன்ஸுமர் கேர் பிஸினஸ் 13.56 சதவீதமும், உணவு பிஸினஸ் 19.38 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. அதேபோல சர்வதேச வியாபாரமும் 18 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

விஜயா வங்கியின் நிகர லாபம் 22% உயர்வு

பெங்களூருவை தலைமையாக கொண்ட விஜயா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து 161 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் 132 கோடி ரூபாய். மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 2,698 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.3,189 கோடியாக இருக்கிறது. ஜூன் காலாண்டில் வாராக்கடன்கள் அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 2.42 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 2.68 சதவீதமாக இருக்கிறது.

நிகர வாராக்கடன் 1.45 சதவீதத்திலிருந்து 1.77 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 49.35 ரூபாய்க்கு விற்பனையானது.

எல் அண்ட் டி லாபம் 2 மடங்கு உயர்வு

எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.458 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.967 கோடியாக உயர்ந்திருக்கிறது.

எதிர்கால திட்டங்களுக்காக பங்கு விற்பனை மூலம் நிதி திரட்டியதும் லாபம் உயர்வதற்கு காரணமாகும். நிகர விற்பனையும் உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் 17,241 கோடியாக இருந்த நிகர விற்பனை, இப்போது 18,974 கோடி ரூபாயாக இருக்கிறது. முடிந்த காலாண்டில் 33,408 கோடி ரூபாய்க்கு ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன. இதில் 14,574 கோடி ரூபாய் வெளி நாட்டிலிருந்து வருபவை. ஜூன் 30 நிலவரப்படி ரூ.1,95,392 கோடிக்கு ஆர்டர்கள் இருக்கிறது.

SCROLL FOR NEXT