பழநி: திண்டுக்கல் மாவட்டம், தொப்பம் பட்டியில் நடைபெற்ற மாட்டுச் சந்தை களைகட்டியது. இதில், காங்கயம் காளைகள் ரூ.1 லட்சம் வரை விற்பனையானது.
பழநி அடுத்துள்ள தொப்பம்பட்டியில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தற்போது 61-வது ஆண்டாக சந்தை ஆக.1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் 750 காங்கயம் மாடுகளை விற்பனை செய்ய கொண்டுவந்துள்ளனர். மாட்டின் பற்களை கணக்கிட்டும், சுழியை வைத்தும் விற்பனை நடைபெறுகிறது.
நேற்று ஆடிப்பெருக்கை யொட்டி தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர். இதில், காங்கயம் கன்றுக்குட்டி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், காங்கயம் காளைகள் ரூ.85 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் விற்பனையானது.
அதேநேரம், இச்சந்தையில் மாடுகளுக்கு வேண்டிய கயிறு, மணி, சலங்கை, சாட்டை, திருகுணி, தீவனப்புல் வெட்டும் கருவி, அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிக அளவில் மாடுகள் விற் பனைக்கு வந்துள்ளதால், சந்தை களை கட்டியுள்ளது.
இதுகுறித்து தொப்பம்பட்டி விழாக் குழுவினர் கூறியதாவது: நாட்டு இன மாடுகளை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் சந்தை நடத்தப்படுகிறது. மாடுகள் மட்டுமின்றி, நாட்டு குதிரைகளும் விற்பனை செய்யப்படும்.5 நாட்கள் நடைபெறும் இச்சந்தை யில் மாடுகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் வசதி இலவச மாக ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டுள்ளது.
இத்துடன் மாடுகளை அழைத்துவரவும், கொண்டு செல்லவும் வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டு இன மாடுகளுக்கு தனி மவுசு இருப்பதால், அதிக அளவில் விவசாயிகள், வியாபாரிகள் சந்தையில் கலந்துகொண்டுள்ளனர் என்று கூறினர்.