வணிகம்

சதிராட்டம் காட்டும் தக்காளி, சின்ன வெங்காயம் விலை: மாங்காய், பெரிய வெங்காயத்தை நாடும் சாமானிய மக்கள்

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: ஒரு மாத காலமாக சதிராட்டம் காட்டும் தக்காளி, சின்ன வெங்காயம் விலைக்கு இடையே சாமானிய நுகர்வோருக்கு மாங்காயும், பெரிய வெங்காயமும் தான் ஆறுதலாக இருந்து வருவதாகத் தெரிகிறது.

தக்காளி, சின்ன வெங்காயம் ஆகிய இரண்டும் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத காய்கறிகள். ஆனால், விளைச்சல் குறைவு காரணமாக வரத்து குறைந்ததால் கடந்த ஒரு மாதமாக இவ்விரு காய்கறிகளின் விலையும் உச்சத்தில் இருந்து வருகிறது. தக்காளி விலை கிலோ ரூ.200 வரையும், சின்ன வெங்காயம் ரூ.150 வரையும் விற்பனையானது.

தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் நேற்று 1 கிலோ தக்காளி ரூ.95-க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.64-க்கும் விற்பனையானது. கடந்த 2 வாரங்களாகவே தக்காளி விலை மட்டுப்பட்டால் சின்ன வெங்காயம் விலை உயர்வதும், சின்ன வெங்காயத்தின் விலை குறைந்தால் தக்காளியின் விலை உயர்வதுமாக இவ்விரு காய்கறிகளின் விலையும் நுகர்வோருக்கு சதிராட்டம் காட்டி வருகிறது.

அதற்காக, இவ்விரு காய்கறிகளையும் முற்றிலும் தவிர்த்து விடவும் முடியாது. எனவே, கிலோ கணக்கில் வாங்க முடியாவிட்டாலும், அவ்வப்போது கால் கிலோ அல்லது அரை கிலோ அளவிலாவது தக்காளி, சின்ன வெங்காயத்தை நுகர்வோர் வாங்குகின்றனர். இதற்கிடையில், சாமானிய நுகர்வோர் இவ்விரு காய்கறிகளுக்கும் மாற்றாக மாங்காய் மற்றும் பெரிய வெங்காயத்தை பயன்படுத்து கின்றனர்.

இது குறித்து, தருமபுரியைச் சேர்ந்த முத்து உள்ளிட்ட நுகர்வோர் சிலர் கூறியது: சில வாரங்களாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.150 இடையிலான விலையில் விற்பனையாகிறது. அதேபோல, தக்காளி ரூ.70-க்கும் ரூ.200-க்கும் இடையிலான விலையில் விற்பனையா கிறது. இதனால், அவ்வப்போது குறைவான அளவில் மட்டுமே இந்த காய்கறிகளை வாங்குகிறோம்.

காய்கறி வாங்க கடைக்கு அனுப்பும்போதே, தக்காளி, சின்ன வெங்காயத்தை தவிர்த்து விட்டு பெரிய வெங்காயமும், மாங்காயும் வாங்கி வருமாறு வீட்டுப் பெண்கள் அழுத்தமாக சொல்லி அனுப்பி வைக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி பச்சை மாங்காய் கிலோ ரூ.45 விலையில் கிடைக்கிறது. தக்காளிக்கு மாற்றாக புளிப்பு சுவை தரும் மாங்காயை சமையல் வகைகளில் மகளிர் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல, பெரிய வெங்காயம் கிலோ ரூ.25-க்கு கிடைக்கிறது. மொத்தமாக வாங்கும்போது 5 கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-க்கு கிடைக்கிறது. எனவே, சின்ன வெங்காயத்துக்கு மாற்றாக பெரிய வெங்காயத்தையே அண்மைக் காலமாக அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை நிலவரம் கட்டுக்குள் வரும் வரை இவ்வாறு தான் காலம் நகர்த்த வேண்டியுள்ளது. இவ்வாறு கூறினர்.

SCROLL FOR NEXT