பங்குச் சந்தையில் புதன்கிழமை மிகப் பெருமளவிலான ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 358 புள்ளிகள் உயர்ந்ததில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 22702 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 101 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6796 புள்ளிகளானது.
கடந்த மார்ச் 7-ம் தேதி சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) 2014-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று கருத்து வெளியிட்டது. அன்றைய தினம் பங்குச் சந்தையில் மிகப் பெரும் எழுச்சி காணப்பட்டது. அதற்குப் பிறகு புதன்கிழமை புள்ளிகள் பெருமளவில் உயர்ந்தன.
மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகளில் சன் பார்மா பங்குகள் மிக அதிகபட்சமாக 6.60 சதவீதம் உயர்ந்தது. ரான்பாக்ஸி நிறுவனப் பங்குகளை சன் பார்மா வாங்கியதைத் தொடர்ந்து இந்நிறுவனப் பங்கு விலைகளும் ஏற்றம் பெற்றன.
முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 26 நிறுவனப் பங்கு விலைகள் உயர்ந்தன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அவற்றின் நிதி ஆண்டு அறிக்கை வெளியாகும் முன்னரே சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு 1.16 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி, ஹின்டால்கோ, பிஹெச்இஎல், லார்சன் அண்ட் டியூப்ரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுஸுகி ஆகிய நிறுவனப் பங்கு விலைகள் ஏற்றம் பெற்றன.
வங்கித் துறை பங்குகள் 3.45 சதவீதம் வரை உயர்ந்தன. இதற்கு அடுத்தபடியாக உலோகத்துறை பங்குகள் 2.26 சதவீதம் உயர்ந்தன. மருந்து பொருள் துறை 2.21 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறை 1.85 சதவீதமும் உயர்ந்தன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதும் உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று வெராசிடி புரோக்கிங் சர்வீசஸ் நிறுவனத் தலைவர் ஜிக்னேஷ் சௌத்ரி தெரிவித்தார்.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ரூ. 703.71 கோடி முதலீடு செய்திருந்தன. செவ்வாய்க்கிழமை ராம நவமியை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறையாகும். விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை பங்குச் சந்தையில் மிகப் பெருமளவிலான எழுச்சி காணப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் 4.40%, ஹின்டால்கோ 4.05%, டாடா ஸ்டீல் 3.18%, ஹெச்டிஎப்சி 2.96%, கெயில் இந்தியா 2.36%, பிஹெச்இஎல் 2.14%, ரிலையன்ஸ் 1.81% அளவு உயர்ந்தன.
பங்குச் சந்தையில் மொத்தம் 1,873 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 877 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 110 நிறுவனப் பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான் பங்குச் சந்தை 2.10 சதவீதம் சரிந்தது. சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் கணிசமான சரிவைச் சந்தித்தன. -பி.டி.ஐ.