கோவை: நன்கொடை, வீட்டுக் கடன் உள்ளிட்ட பெயர்களில் பொய் தகவல்களை தெரிவித்து வரி சலுகைகள் பெறுவோரை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுவதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரி செலுத்த தகுதியுடையவர்கள் ஆண்டுதோறும் ஜூலை 31-ம் தேதிக்குள் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர் அலுவலகத்தின் கீழ் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது பெரும்பாலும் ஆன்லைன் முறையில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வரி செலுத்துபவர்களின் அனைத்து தகவல்களும் துல்லியமாக கிடைக்கின்றன. முறைகேடுகள் தடுக்கப்படுகின்றன. இதனால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வரி மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு இந்திய அரசு மக்கள் நலதிட்டங்களுக்கு தான் அவற்றை பயன்படுத்துகிறது. எனவே, வரி செலுத்த தகுதியுடையவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.
தென்னிந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜலபதி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பட்டய கணக்காளர் (ஆடிட்டர்) உதவி தேவைப் படாத பிரிவுகளை சேர்ந்த அனைவரும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடுகளை தடுக்க வருமான வரித்துறையில் இந்தாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யும் போது பான், ஆதார் உள்ளிட்டவையே முக்கிய ஆவணங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வரி செலுத்துவோரின் அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் இந்த ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் மிக அதிக தகவல்கள் பதிவு செய்யப்படுவதால் மனிதர்களால் மட்டும் அவற்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடியாது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் ரூ.10 அல்லது ரூ.20 தொகை வித்தியாசம் இருந்தால் கூட துல்லியமாக தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்கொடை என்றால் எந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது?, மருத்துவ காப்பீடு என்றால் அதற்கான ஆவணங்கள் இணைக்க வேண்டும். வழங்கப்பட்ட தகவல்கள் சரியாக இருந்தால் மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். இல்லையெனில் தொழில் நுட்பம் தானாகவே நிராகரித்துவிடும். உரிய ஆவணங்களை இணைத்து தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.
கடந்த காலங்களில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் மாதாந்திர ஊதியம் பெறுபவர்களில் அதிக முறைகேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் அத்தகைய பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே தடையின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். முறைகேடுகளின் தன்மையை பொறுத்து, அதற்கு உதவிய ஆடிட்டர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.