ஜெனிவா: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளின் வழியே இந்தியாவில் வேளாண் துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்று உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தெலங்கானா அரசு அந்த மாநில வேளாண் துறையில், உலக பொருளாதார கூட்டமைப்பின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக 7,000 மிளகாய் உற்பத்தி விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கானா அரசு இவ்வாண்டில் இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் மிளகாய் மற்றும் கடலை விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களைக் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நுண்ணறிவு தொழில்நுட்ப அறிமுகம் அந்த விவசாயிகளிடம் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பது தொடர்பாக உலக பொருளாதார கூட்டமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன தொழில்நுட்பங்களின் வழியே இந்தியா வேளாண் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தபடி உள்ளது. இந்தியாவில் வணிகம், கல்வி, மருத்துவம், தொலைக்காட்சி, பாதுகாப்புத் துறை மற்றும் அரசு சேவைகள் உட்பட பல்வேறு தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், வேளாண் துறையில் ஏஐ உட்பட நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரித்தால், அத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் வேளாண்துறையில் ஏஐ தொழில்நுட்பங் களைப் பயன்படுத்துவது அவசியம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.