புதுடெல்லி: நடப்பாண்டில் ஜூலை 18-ம் தேதி நிலவரப்படி 2023-24 ஆண்டுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் (ஐடிஆர்) செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்த 3.06 கோடி பேரில் 2.81 கோடி பேருக்கு ஆதார் ஓடிபி அடிப்படையில் ஆன்லைன் மூலமாகவே (இ-வெரிபைடு) விண்ணப்பங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த கணக்கு தாக்கல் செய்தவர்களில் இ-வெரிபைடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 சதவீதமாகும்.
வரி செலுத்தியவர்களுக்கு அளிக்கப்படும் ரீபண்ட் இந்த ஆண்டு தாமதமாவதற்கு கணக்கு தாக்கல் விணணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது.
கணக்கு தாக்கலின்போது தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஐடிஆர் ரீபண்ட் பெறுவதற்கு பொதுவாகவே 2 முதல் 6 மாதங்கள் வரையில் ஆகும் என்பதே கணக்கு தணிக்கை வட்டாரத்தின் கருத்தாக உள்ளது. ஆனாலும், ஒரு சிலருக்கு ஒரே வாரத்தில் ரீபண்ட் தொகை திரும்ப கிடைத்துவிடுவதும் உண்டு. விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டவுடன் வரி செலுத்துவோருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவ்வப்போது ரீபண்ட் நிலவரத்தை சரிபார்த்து கொள்வதன் மூலம் அதுகுறித்த விவரங்களை நாம் அவ்வப்போது தெரிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்வினையாற்றுவதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதே தணிக்கை வட்டாரத்தினரின் கருத்து.