கோவை: தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பு: வர்த்தக மூலங்களின்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, பொள்ளாச்சி, பல்லடம், ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் இருந்து காங்கயம் சந்தைக்கு தேங்காய் வரத்து உள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்தும் நடப்பு மாதத்தில் இருந்து தேங்காய் வரத் தொடங்கியுள்ளது.
ஆண்டின் முதல் பாதியில் தாவர எண்ணெய், குறிப்பாக பாமாயில் இறக்குமதி அதிகரித்ததாலும், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் கச்சா சமையல் எண்ணெய்க்கான குறைந்த இறக்குமதி வரி காரணமாகவும் கொப்பரை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கொப்பரை பதப்படுத்தும் காலத்தில் சீரற்ற மற்றும் உபரி மழை காரணமாக கொப்பரையின் தரம் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேங்காய் எண்ணெயின் தேவை மற்றும் விநியோக நிலையால் கொப்பரையின் விலை பாதிக்கப்படுகிறது. இருப்பினும், தேங்காய் எண்ணெயின் விலை, இறக்குமதி செய்யப்படும் பாமாயிலின் விலையால் பெரிதும் தாக்கத்துக்கு உள்ளாகிறது.
விலை முன்னறிவிப்புத் திட்ட குழு, கடந்த 15 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல் பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு மையத்தில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.10 முதல் ரூ.12 வரை இருக்கும். தரமான கொப்பரையின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.