பழநி: பயிர் வளர்ச்சிக்கு உதவும் துத்தநாக நுண்ணூட்டச் சத்தை, பழநி உட்பட 10 இடங்களில்களில் திரவ வடிவில் தயாரித்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.
பழநியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு அசோஸ் பைரில்லம், ரைசோபியம் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களைக் கொண்டு, திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் உரம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
திரவ உயிர் உரங்கள் 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 22 திரவ உயிர் உர உற்பத்தி மையங்கள் உள்ளன. தற்போது நெல் உட்பட அனைத்து வகை பயிர் வளர்ச்சிக்கு உதவும் துத்தநாக நுண்ணூட்டச் சத்தை திரவ வடிவில் தயாரித்து விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக பழநி, அரியலூர், கடலூர், சேலம், அவிநாசி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆகிய 10 இடங்களில் உள்ள திரவ உயிர் உற்பத்தி மையங்களில் தலா 10,000 லிட்டர் திரவ துத்தநாக பாக்டீரியா தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை (500 மி.லி) ரூ.150. மானியத்தில் ரூ.75-க்கு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து திரவ உயிர் உர உற்பத்தி மைய வேளாண் அலுவலர்கள் பத்மபிரியா, பூரணி கூறியதாவது: தமிழக மண் வகைகளில் துத்தநாக சத்து பற்றாக்குறையாகவே காணப்படுகிறது. 2025-ல் துத்தநாக சத்து பற்றாக்குறை 42 முதல் 62 சதவீதம் வரை உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இச்சத்து குறைபாடுடைய தானியங்களை பயன்படுத்தும் போது, மனிதர்களுக்கும் இச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.
எனவே, இந்த உயிர் உரங்களை விவசாயிகளுக்கு பரிந்துரைக்கும் வகையில் உற்பத்தி செய்து விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. திரவ துத்தநாக பாக்டீரியா பயிர் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு காரணிகளை உருவாக்குகிறது. அனைத்து வகையான பயிர்களுக்கும் இந்த திரவ உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கர் நெற்பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படும் 25 கிலோ ஜிங்க் சல்பேட் நுண்ணுரத்துக்கு பதிலாக 12.5 கிலோ இந்த உயிர் உரத்தை பயன்படுத்தலாம். இந்த உரத்தால் மகசூல் 10 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும். மண் வளத்தை காப்பதோடு குறைந்த செலவில் அதிக லாபம் பெற வழிவகை செய்கிறது. இந்த உரத்தை ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகளுடன் பயன்படுத்தக் கூடாது.
பழநியில் தயாரிக்கப்படும் திரவ துத்தநாக பாக்டீரியா திண்டுக்கல், தேனி, திருவாரூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும், இவ்வாறு அவர்கள் கூறினர்.